Friday, September 20, 2013

புரிதல்



என்னை மன்னித்துவிடு
எல்லையுள்ள அன்பை
உன்னிடத்தில் காட்டுவதில்
நான் தோல்வியடைந்துவிட்டேன்..!

விலகியும் விலகாமலும்
நெருக்கம் காட்டுகிற
உன் கலை
எனக்கு கை வருவதில்லை
ஆண் பெண் நட்பின்
சமூக பிரச்சனைகளை
நான் அறியாதவனும் இல்லை..!
உன்னைப் பற்றிய
என் நினைப்பை
அதிகரிக்கப்போகிற
நம் பிரிவில்
இனி நாம் நெருங்கியிருப்போம்..!

நீ மட்டும் ஏன்
இப்படியிருக்கிறாய்?
என அடிக்கடி கேட்கிறாய்
நான் என்ன செய்ய?
உன்னோடு பேசுகிற சந்தோசத்திலும்
பேசாத வருத்தத்திலும் தான்
எனக்கு கவிதை கிடைக்கிறது..!

காதல் திருமணம் செய்த
உன் பெயரைக்கொண்ட
வேறு ஒரு தோழியின்
பிரச்சனைகளுக்கு
அனுசரணையாய் நீண்டநேரம்
அலைபேசியில் பேசிய தாக்கத்தில்
உன்னை அவள் பெயரைச்சொல்லி
அழைத்துவிட்டேன்..!

வழக்கத்திற்கு மாறான
மெய்யெழுத்தின் அழுத்தம் கண்டு
கண்கள் சுருக்கி முறைத்து
என்னோடு பேசுகையில்
அவள் எப்படி
உன் நினைவுக்கு வரலாம்
என சண்டையிடுகிறாய்..!

உன்னைப் பற்றிய
என் கவிதைகள் பலவற்றை
மிகைப்படுத்தி எழுதியிருப்பதாக
சொல்கிறாய்..!
மிகைப்படுத்தி எழுதுவதுதான்
கவிதை என்றாலும்
வார்த்தைகளிலேயே
கொண்டுவரமுடியாத
நம் உணர்வுகள் பலவற்றை
வெளிப்படுத்த முடியாத
என் விரக்தியை
வேறு எதன் மீது
நான் இறக்கி வைக்க..?

நான் உன்னை
அன்பு செலுத்துகிற
அளவுக்கு நீ என்னையும்,
நீ என்னை
அன்பு செலுத்துகிற
அளவுக்கு நான் உன்னையும்
அன்பு செலுத்தவில்லையென்று
அவ்வப்போது மாறி மாறி
நினைக்க தூண்டும்
உன் வித்தையில்
எனக்கு புரிந்தது
நாம் நம்மை நம்மைத்தாண்டி
அன்பு செலுத்திக்கொண்டிருக்கிறோம்
என்பதுதான்..!

No comments: