Saturday, July 16, 2011

கடவுளின் பாலினம்

அண்ணன் குழந்தை, 20 மாதம் ஆகிறது. செல்ல மொழிப் பேசி அன்ன நடை பயின்றுவருகிறது.
கடந்த மாதம் முழுவதம் அலுவல், எல்லா வார நாட்களும் விடுமுறை நாட்களுமாக தொடர்ந்து ஒரு 25 நாள் வேலை. பொதுவாக இது போல் இல்லை எனினும் கணினி துறையில் எப்போ என்னவென்று எதுவும் சொல்வதற்கில்லை. இந்த இடைவேளைக்கு பிறகு திருப்பூர் சென்றிருந்தேன் வழக்கம்போல!

அள்ளி அணைத்த பேரனிடம்;
அம்மா - சச்சு யாரு இது?
குட்டி - சித்த்த்த்தா...............
அம்மா - பெங்களுருவிலிருந்து எப்ப வந்தீங்க கேளு;
குட்டி - கட்டை விரல் உயர்த்தி கை அசைத்து கேட்டது பெண்கு எப்பப்....

படர்ந்த அன்றைய நாளில் மாலை நேரம்  குழந்தை எதையோ செய்துவிட நானும் குரல் உயர்த்தி போலி கோபம் கொண்டேன். வரவேற்பறையில் என்னோடு இருந்தவன் மெல்ல எழுந்து எதோ சிந்தித்தவாறு இரு கைகள் உருட்டி கொண்டே மெல்ல அம்மாவை தேடி நடையிட சில நொடிகள் என்னை பார்பதுமாய் நடப்பதுமாய் சுவர் வரை சென்று சற்றே உருவம் மறைத்து பின் வெளி வந்து அகண்ட கை விரல் எனை நோக்கி "மூமூந்ஜ்ஜ்ஜீஈ[மூஞ்சி]" எனக் கூறி ஆண் கடவுள் காட்டினான்.

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடந்த சனிக்கிழமை மதியம் ஒரு பனிரெண்டு மணி அளவில் பெங்களூரில் வீடு பக்கத்தில் இருக்கும் ஒரு ATM இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றிருந்தேன். நல்ல கூட்டம். மொத்த கூட்டமும் வங்கி வேலைக்கு வந்திருந்தவர்கள்.

ATM இல் ஒரு நபர் இரு குழந்தைகள். அண்ணனும் தங்கையும்.

பெண் குழந்தை ஒவ்வொரு பரிவர்த்தனை தாளாக வெளி இழுத்து கிழித்துகொண்டிருந்தது, அண்ணன் வேண்டாமென்று துரத்த இரண்டும் எங்கோ ஓடிச் சென்றது. பின், முன்னிருந்தவர் நகர நானும் பணம் எடுக்கப் பணிந்தேன். சில நொடிகளில் சத்தத்துடன் ஓடி வந்த குழந்தைகள் என்னை எனக்கு முன் நின்றவர் என எண்ணி சுற்றி கொண்டிருக்க பெண் குழந்தை என் மேல் தாவி ஏறியது. அள்ளிக்கொண்டு பணத்துடன் வெளி வந்து குழந்தை முகம் பார்க்க தானும் என் செய்வதறியாது எனை பார்த்தது, அப்பொழுது தன் அப்பா வர நானும் கீழே இறக்கி விட ஓடிச் சென்று அவர் கால்களுக்கு பின்னல் ஒளிந்துகொண்டது.

என் பத்து விரல்களையும் குஷ்டம் போல் மடக்கி இரு கைகளையும் காதோடு வைத்து சற்றே முகம் மாற்றி உற்ர்ர்ர்  என்க முழவதுமாய் தன்னை மறைத்துகொண்டது. அந்த ஆனந்த மனிதரைப் பார்த்து சற்ற சிரித்து நகர்ந்தேன்.
வெளி நின்ற இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து பயணப்பட ஆயத்தமாகி ஒரு முறை திரும்பி பார்க்க, படியில் தனியே நின்று எனை பார்த்து கொண்டிருத்த குழந்தை "தேங்க்யு அங்கிள் " என சொல்லிச்சிரிக்க அன்று பெண் கடவுளும் கண்டேன்!!