Tuesday, February 12, 2013

கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் வரலாறு 4



தங்கம்மன் அருள்
அன்னை தங்கம்மன் தன அடியார்களுக்குப் பூரணமாக அருள் பாலித்து வருகிறாள். இதனை ஆலயத்திற்கு வந்து வழிபட்டுச் செல்லும் அன்பர்கள் நன்கு உணர்கின்றனர். தங்கள் வாழ்வில் மெய்யாக நடப்பதையும் அறிகின்றனர்.

அருள்மிகு தங்கம்மன் திருக்கோயில் காணியாளர்களின் இல்லத்துப்பெண்கள் திருமணம் ஆகிச்செல்லும் இடங்களில் சீருடனும் சிறப்புடனும் வாழ தங்கம்மன் அருளே நிறைந்து விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. அவ்வாறே காணியாளர்கள் வேண்டுகின்றனர். அனைத்தும் நலமாக முடிகிறது. இதற்குப் பலர் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சான்றாகக் காட்டலாம்.

பழங்காலத்தில் பல அற்புததத் திருவிளையாடல்களைத் தங்கம்மன் விளையாடி இருக்கிறாள். அவற்றுள் ஒன்று நம் கற்பனைக்கு எட்டாதது. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு பலமுறை நடந்த நிகழ்ச்சி.

  • கொடுமணல் காணியாளர்களின் வீட்டில் பெண்களுக்குத் திருமணம் நடைபெற்றால் கொங்கு வேளாளர் வழக்கப்படி பெண் வீட்டில் திருமணம் நடைபெறுதல் இயல்பு.

திருமணத்திற்கு முந்தைய நாள் திருமண வீட்டாரும் உற்றார்களும் உறவின் முறையாரும் திருமணத்தை முன்ன்னின்று நடத்தி வைக்கும் அருமைப் பெரியோர்களும் மங்கள வாத்தியத்துடன் ஒரு சிறு கூடையில் தேங்காய் பழம், பிற பூஜைக்குரிய பொருட்கள், அபிஷேகப் பொருட்கள் அனைத்தையும் வைத்து எடுத்துக்கொண்டு சென்று பக்திப் பரவசத்துடன் திருக்கோயில் முன்னால் நொய்யல் ஆற்று ஆணை அருகே வைத்து விட்டுத் திரும்புவர்.

பின்னர் இரண்டு நாழிகை நேரம் சென்று அவ்வாறே அனையருகே பார்க்கும் பொழுது அவர்கள் வைத்த கூடையில் திருமனதிற்குரிய அணைத்து நகைகளும் இருக்கும் அதைக் கொண்டு வந்து பெண்ணுக்கு அணிவித்துத் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவர்.

திருமணம் முடிந்த பின் முன் போலவே அனைவரும் கொண்டு சென்று நகையை வைத்து விட்டு வந்தது விடுவர். சிறிது நேரம் கழித்துப் போய்பார்த்தால் நகை இருக்காது. இச்சபவம் நடைபெற்றதை உள்ளூர் காணியாளர்கள் பலர் செவிவழிச் செய்தியாகக் கேள்விப்பட்டதை நினைவு கூறுகின்றனர்.

  • கோயிலுக்கு அருகே எல்லையில் ஒரு புற்று இருக்கிறது. அந்த புற்றில் ஒரு வெள்ளை நாகம் வாழ்ந்து வந்தது. கோயில் திருப்பணி நடைபெறும் பொழுதும் பிற சமயங்களிலும் பகல் 11,12 மணிக்கெல்லாம் திருப்பணி செய்யும் அன்பர்களும் பிறரும் வரும்பொழுது பல நேரங்களில் ஆலயத்திற்கு உள்ளும், ஆலய எல்லைக்குள்ளும் பல சந்தர்பங்களில் அந்த வெள்ளை நாகம் காட்சியளித்துள்ளது. ஆலய அர்ச்சகரும் அவ்வெள்ளை நாகத்தைப் பலமுறை நேரில் கண்டுள்ளார் என்றும் அடியார்களுக்கு அதனால் ஒரு சிறு தொல்லைகூட ஏற்பட்டது கிடையாது. அம்மன் அருளினால் நாகசக்தி இவ்வாறு இருந்தது ஒரு பெரும் அற்புதமான செயலே.

  • சில ஆண்டுகளுக்கு முன் நில அளவையாளர் ஒருவர் இத்தங்கம்மன் கோயில் மேல் தலத்தில் தம் கருவிகளுடன் அளவையை நடத்திக் கொண்டு இருந்தார். நல்ல வெயில் காலம் பகல் 1 மணி இருக்கும், அவருக்கு நல்ல பசி, தண்ணீர் தாகம் அப்பொழுது ஒரு சிறுமி தண்ணீர் கொண்டு கோயிலுக்குள் செல்வதை அவர் கண்டார். தன உதவியாளரை அழைத்து ஒரு சிறுமி தண்ணீர் கொண்டு செல்கிறாள் தண்ணீர் வாங்கி வா என்றார். உதவியாளர் உள்சென்று பார்த்தபோது அங்கு யாருமே இல்லை எவர் வந்த அடையாளமும் தெரியவில்லை. பின்னர் இருவரும் விசாரித்ததில் தங்கம்மனே அப்படிச் சிறுபெண் வடிவத்தில் தோன்றி அருள்பாளிததாக அறிந்தனர். பக்திப் பரவசமான அவர்கள் அருகில் இருந்த பெரியவரிடம் பத்து ரூபாயைக் கொடுத்துப் பூஜை செய்ய ஏற்பாடு செய்து வழிபட்டுச் சென்றனர்.

கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் வரலாறு 3



புதிய திருப்பணி
இந்நிலையில் சி.வெங்கிட்டாபுரம் செ.ரங்கசாமி அவள்களின் பெருமுயற்சியால் நான்கு குலத்தவர்களின் ஒத்துழைப்புடன் ஆயிரத்து தொள்ளயிரத்து எழுபத்தி ஐந்தாம் ஆண்டு (3-11-1975 அன்று) முத்துக்கவுண்டன்புதூர் காலஞ்சென்ற சு.சின்னசாமிக்கவுண்டர் தலைமையில் கானங்குலம் காலஞ்சென்ற வா.லிங்கசாமிகவுண்டரை துணைத் தலைவராகவும், கொடுமணல் வீ.இராமசாமிக்கவுண்டரை செயலாளராகவும், செங்கோடகவுண்டன்புதூர் செ.சென்னியப்பகவுண்டரைப் பொருளாளராகவும் கொண்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் பொறுப்பில் நான்கு குல மக்களின் பெரும் பொருள் உதவி பெற்று தங்கம்மனுக்கு புதிய திருக்கோயில் அமைக்கப்பட்டது. மேலும் திருமதில் தீர்த்தக்கிணறு தங்கும் இடங்கள் ஏற்ப்படுத்தபட்டது.

ஆலயத்துக்காக நிலம் வாங்கி கிணறு வெட்டி தென்னந்தோப்பு வைக்கபட்டது. புதிய திருக்கோயில் திருக்குட நீராட்டு விழா 2-2-1979 அன்று சிறப்புற நடைபெற்றது.

தொடர்ந்து திருப்பணிகள்
நான்கு குலத்தவர்களும் சேர்ந்து கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் ஆலய நற்பணிச் சங்கம் என்கிற பெயரில் சங்கம் பதிவு செய்யப்பட்டு தங்கம்மன் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் இதர திருப்பணிகளையும் செய்து வருகிறது.
கோயிலைச் சுற்றிலும் உள் பிரகாரம் கல்தளம் அமைக்கப்பட்டது. மேலும் திருக்கோயிலின் மூன்று வாயில்களும் புதிய முன் மண்டபங்களும் பிரகாரத்தில் புதிய குதிரை வாகனங்களும் அமைக்கப்பட்டது. மேலும் திருக்குட நீராட்டு செய்யப்பட்டு பனிரெண்டு ஆண்டுகளுக்குள் மறுமுறையும் திருக்குட நீராட்டு செய்ய வேண்டும் என்கிற நியதியின் படி 21-2-1991-ல் இரண்டாம் முறையாக அருள்மிகு தங்கம்மன் திருக்கோயில் திருக்குட நீராட்டுப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

1997-ல் முன்னாள் திருப்பணிக்குழுத் தலைவர் நினைவாக அன்னதான மண்டபம் கட்டப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான விடுதியும், பூஜை செய்யும் அர்ச்சகருக்கு கோயில் அருகே வீடும் கட்டப்பட்டது. ஆற்றுக் கன்னிமார், புற்றுநாகர், செல்வ விநாயகர் திருக்கோயில்கள் புதியதாக கட்டி தங்கம்மன் ஆலயத்தை மேலும் அழுகுற திருப்பணி செய்து 6-2-2003-ல் மூன்றாவதாக திருக்குட நீராட்டுப் பெருவிழா வெகுசிறப்பாக செய்யப்பட்டது.

அருள்மிகு தங்கம்மன் திருக்கோயில் உடன் இணைந்த அருள்மிகு அக்னீஸ்வரர் – திரிபுரசுந்தரியம்மன் கோயில்கள் நொய்யல் ஆற்று ஒரத்துப்பாளையம் அணையில் மூழ்கி விட்ட படியால் தங்கம்மன் கோயில் அருகே மேற்படி சுவாமிகளுக்கும், அதற்குரிய பரிவார தெய்வங்களுக்கும் புதிய கோயில்கள் கட்டி
24-6-2005-ல் திருக்குட நீராட்டு விழா சிறப்பாக செய்யப்பட்டது.
தங்கம்மன் கோயிலுக்கு வரும் வழியில் அலங்கார வளைவும், தங்கம்மன் கோயில் அருகே மணி மண்டபமும் கட்டப்பட்டது.
பக்தர்கள் பொங்கல் வைப்பதற்க்கு வசதியாக மண்டபம் கட்டப்பட்டது.
தங்கம்மன் திருக்கோயிலுக்கு தற்பொழுது ஒன்பது ஏக்கர் நிலம் நமது குலத்தைச் சேர்ந்த அன்பர்களின் உதவியால் வாங்கப்பட்டுள்ளது. தினசரி திருப்பூரிலிரிந்து அரசு நகரப் பேருந்துகள் தங்கம்மன் கோயிலுக்குவந்து போகிறது.

சிறப்பு பூஜைகள்
தங்கம்மனுக்கு தினசரி மூன்று கால பூஜைகள் மற்றும் மாதந்தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, சரஸ்வதி பூஜை, கார்த்திகை தீபம், மாசி மகா சிவராத்திரி போன்ற விசேச தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

திருவிழாக்கள்
ஆண்டு தோறும் ஆடிமாதம் 18-ம் நாள் ஆடிப்பண்டிகை விழாவும், அதற்கு அடுத்துவரும் புதன்கிழமை பொங்கல் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
தங்கம்மன் திருவருள் துணையால் நான்கு குலத்தவர்களின் ஒத்துழைப்புடன் போது மக்கள் உதவி கொண்டு ஆலய நற்பணிச் சங்கத்தின் மூலம் தங்கம்மன் ஆலயப்பனிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அன்னதானம்
தங்கம்மன் ஆலயத்தில் நடைபெறுகின்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்சிகளுக்கும், திருவிழக்களுக்கும் வருகின்ற பக்தர்களுக்கு தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது.

கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் வரலாறு 2



காணியாளர்
இவ்வகையில் சேலம் பகுதி சிந்தாளந்தூரில் இருந்து சேரன் குலத்தவரும், பழனி பகுதி மானூரில் இருந்து பாண்டியன் குலத்தவரும், ஈரோடு பகுதி எலுமாத்தூரில்இருந்து பனங்காடை குலத்தவரும் காஞ்சிமாநதி என்கிற நொய்யல் கரையில் குறிப்பு நாடு கொடுமணல் கிராமத்தில் குடியேரினார்கள் என்றும் அப்போது இங்குவாழ்ந்து வந்த கொங்க செட்டியார்களிடமிருந்து பொருள் கொடுத்து நில ( கொடுமணல் காணி) உரமை பெற்றனர் என்றும் கொடுமணல் வரலாற்றுச் சுவடிகள், பட்டயங்கள் மூலம் தெரியவருதிறது.

குலதெய்வம்
இவ்வண்ணம் குடியேறிய மக்கள் கொடுமணல் பகுதியில் நொய்யல் ஆற்றில் சோழமன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் அணையின் கரையில் தாங்கள் முன்னாளில் குடி இருந்த ஊர்களில் இருந்து கொண்டு வந்த தெய்வத் திருவுருவங்களை வைத்து கோயில் கட்டி குல தெய்வமாக வழிபட்டு வந்தார்கள்.
யார்கள் முன்னாளில் சோழ நாட்டுப் பகுதியில் வாழ்ந்த போது கரூருக்கு கிழக்கே காவிரிக்கரை ஓரம் மதில் கரை (தற்போது மாயனூர்) என்ற இடத்தில செல்லாண்டியம்மனை எழுந்தருளச்செய்து குலதெய்வமாக வழிபட்டு வந்தார்கள் என்று கொங்கு வேளாளர் வரலாற்றுப் பட்டயங்களும் செய்திகளும் தெரிவிக்கின்றன.

முற்காலத்தில் விஜய நகர மன்னர்களின் ஆட்சியில் அவர்களின் தென்னாட்டு(மைசூர்) ஆட்சிப் பிரதிநிதியாக இருந்த நஞ்சராய உடையார் என்பவர் காலத்தில் பழையகோட்டை மன்றாடியார் மரபினரான பயிரன் கூட்டத்தார்களும் கொடுமனல்நில (காணி) உரிமை பெற்றனர் என்று பழையகோட்டை வரலாறு கூறுகிறது.

தென்காசிப்பகுதி வாதவனல்லுரில் இருந்து காங்கயம் பகுதியில் குடியேறிய தேவர் இன கணக்கன் கூட்டாத்தார் சுமார் மூன்னுற்றி எண்பது (௩௮௦) ஆண்டுகளுக்கு முன் பழையகோட்டை மன்றாடியார் வழிவந்த விசுவனாதச்சர்கரை மன்றாடியார் அவர்களிடமிருந்து கொடுமணலில் நில (காணி) உரிமை பெற்றதாக கணக்கன் கூட்டத்தார் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் நொய்யல் அணை ஓரத்தில் நாச்சிமார் என்ற பெயரில் கன்னிமார் வைத்து வழிபாடு செய்து வந்தாதாகவும் மேற்படி பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது

இப்படியாக கொடுமணல் கிராமத்தில் காணி பெற்ற கொங்கு வேளாளர்களில் சேரன், பாண்டியன், பனங்காடை குலத்தவர்களும் தேவர் இனத்தவரில் கணக்கன் கூட்டத்தாரும் சப்தமாதக்களை குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தனர் என்பது பழங்காலப் பாடல்களிலும் பட்டயங்களிலும் காணப்படுகிறது.
அத்தெய்வம் தங்கைமார், கன்னிமார், தங்கமார், தங்கமாரம்மன் என்று பல பெயர்களில் வரலாற்றுச் சான்றுகளிலும் பழம்பாடல்களிலும் கூறப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் தங்கம்மன் என்கிற பெயர் வழக்கில் வந்து அப்பெயரே சப்தமாதக்களுக்கும் (ஏழு அம்மன்) பொதுப்பெயராக நிலைத்து விட்டது என்பதே உண்மை.

தேக்கநிலை
பிற்காலத்தில் நொய்யல் ஆற்று அணை உடைந்து கொடுமணல் பகுதியில் விவசாயம்செழிப்பின்றி வறட்சி ஏற்பட்டதின் காரணமாக இங்கு வாழ்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு முக்கியமாக மேற்குப் பகுதிகளில் சென்று குடியேறி வாழ்ந்து வரலாயினர். மேலும் இவர்கள் குடியேற்றம் பல்வேறு பகுதிகளுக்கு விரிந்து சென்றது.

நாளாவட்டத்தில் கொடுமணல் கிராமப் பகுதி நொய்யல் ஆற்றை எல்லையாகக் கொண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு தம்மரெட்டிபாளையம் கிராமப் பகுதியில் தங்கம்மன் ஆலயம் சேர்ந்ததாலும், போக்குவரத்து வசதி இல்லாததாலும் உள்ளூரில் இருக்கும் குல மக்கள் ஆலயத்தை சரியாக பராமரிப்பு செய்யாததாலும் தங்கம்மன் ஆலயம் பின்னப்பட்டுப் போய் சிதைந்த நிலை ஏற்பட்டது.

ஆயினும் ஆங்காங்கு வாழ்கின்ற மேற்படி குலங்களைச் சேர்ந்த மக்கள் அவ்வப்போது தங்கம்மன் ஆலயத்துக்கு வந்து வழிபாடு செய்து கொண்டு இருந்தனர்.

கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் வரலாறு 1



உ
அருள்மிகு தங்கம்மன் துணை
கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் வரலாறு
(சிறு குறிப்பு)

கொங்கு நாடு

கொங்கு நாடு என்பது தற்போதைய கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களையும் திருச்சி மாவட்டத்தில் கரூர், குளித்தலை பகுதிகளையும், தர்மபுரி மாவட்டத்தின் தெற்குப் பகுதியையும் உள்ளிட்ட நிலப்பரப்பாக இருந்தது.

கொங்கு நாடு மலைபகுதிகளைக் கொண்டதாகவும் நிலப்பரப்புகளில் காடுகள் நிறைந்த வனப்பகுதியாகவே இருந்திருகிறது. இப்பகுதியில் ஓர் சில முக்கிய ஊர்கள் மட்டுமே இருந்து அதில் மக்கள் வாழ்ந்து வந்தனர். காட்டுப்பகுதியில் வேடர், வேடுவர் போன்ற இனத்தார்கள் வாழ்ந்தனர். இவர்கள் மிருகங்களை வேட்டையாடியும் பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றையும் உணவுக்காக பயன்படுத்தி வாழ்ந்து வந்தனர்.

இந்த கொங்கு நாட்டுப் பகுதியை அவ்வப்போது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர் என்பது வரலாறு கூறும் செய்தியாகும்.

சில காலங்களில் கொங்குநாடு இம்மூவேந்தர் அல்லாத பிற மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்திருக்கிறது.

குடியேற்றம்
வெகுகாலத்துக்கு முன் நமது முன்னோர்கள் சோழ, நாட்டுப்பகுதியில் இருந்து இந்த கொங்கு நாட்டுப் பகுதியில் குடியறியதாக வரலாறுகள் கூறுகின்றன. அப்படி குடியேறிய மக்கள் அதுசமயம் கொங்குநாட்டுப் பகுதியை தாரபுரத்திலிருந்து ஆட்சி செய்து வந்த சேர மன்னர்களின் அனுமதி பெற்று பல்வேறு இடங்களில் குடியமர்ந்தார்கள்.

இவர்கள் தண்ணீர் வசதியை முன்னிட்டு பெரும்பாலும் ஆற்றங்கரைப் பகுதிகளிலயே குடியேறி காடுகளைத் திருத்தி விவசாய நிலங்களாக்கி பயிர்த்தொழில் செய்து வந்தனர்

Thursday, September 13, 2012

இரண்டு வரி

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்,
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய் 
 

Tuesday, July 24, 2012

நான் இப்பொழுது

எண்ணங்கள் வார்த்தைகளாக வடிவம் பெறுகிறது...
தகுதி கொண்டு பறைசாற்ற வழி தேடுகிறேன்,
மொழியின் அவமதிப்பா!
நான் கொண்ட கடவுளின் மறுதலிப்பா!
வினைப்பயன் என கொள்ளவா?
கலியுகம் உண்டோ?
இயேசு வருவரோ?
ஆன்ம பலம் தோற்குமோ?
எதை நோக்கி செல்வது?
உள்ளும் புறமும் தாளிட்டுகொள்கிறது
என் சுயம் தேட வழியின்றி....
உடலில் ஓடும் நதிகளை
ஒவ்வொன்றாக நசுக்கி
மனக்கடலினடியில்
எறிந்துகொண்டிருக்கிறான்..
ஒப்பனைகளுக்கு பஞ்சமில்லை,
இன்னும் சொல்வதென்றால்
உணரவற்ற பொழுதுகளில்
நிர்வாணமாகப்படுவது வேசிகள் மட்டுமல்ல ...

Tuesday, April 24, 2012

இப்படியும் வாழ்க்கை உண்டு

உறக்கம் கலைக்க யாரும் இல்லை எனினும்
ஒவ்வொரு நாளும் இரவுகள் விடியும்.
எப்படியும் ஏற்பட்டுவிடும்,
தேநீர் தயாரிக்கையில் ஒன்றிரண்டு தீக்காயங்கள்!

வழக்கம் போலவே
எனக்கான கடிதங்கள் ஏதுமின்றி
வாசல் தாண்டி போவான் தபால்காரன்.

எடுத்து பரிமாற யாருமன்றி
அவசரமாய் அள்ளி உண்ணும்போது
அம்மாவின் ஞாபகம் ஏனோ தோன்றும்.

அலுவலக நேரங்களில் நண்பர்களிடம்
எத்தனை சிரித்துப்பேசினாலும்..
அத்தனயும் பொய்யென்றே
உள்மனம் உரைக்கும் .

சூரியன் மெல்லமாய் மறயத்தொடங்கும்.
வரவேற்க யாரும் இருப்பதில்லை என்றாலும்
பூட்டிய வீடு நோக்கி கால்கள் போகும்.

இருள் பரவிய அடர்ந்த இரவில்...
நிலவின் வெளிச்சத்தில்
வாழ்க்கை என்பதே புதிராய் விளங்கும்..

நினைத்து பார்க்க நினைவுகளில்லை...
உறங்கிப் போனால் கனவுகளுமில்லை
எனும்போது..

ஒரு பெருமழைக்கான ஆரம்பமாய்
விழத் தொடங்கும் தூறல் போல...
அடிமனதில் ஓர் விசும்பல் தொடங்கும்.....


ஒவையே கொடிது கொடிது
இளமையில் தனிமை கொடிது...