Friday, June 17, 2016

அப்பா!



என்னுடைய
உச்சரிப்பு அகராதியிலிருந்து
உதிர்ந்துவிட்டது
அப்பா என்ற சொல்!

அவர் எரிந்து
எட்டு வருஷமாச்சு.

நான் வைத்த கொள்ளிக்குத் தப்பி.
அப்பாவின் சில துணிகளும்
ஒரு மூக்கு கண்ணாடியும்
பத்திரம்!!!

அறுபதுகளின்
ஆண்மகன் நீ!

உலகப்பயணம் முடித்துச் சென்ற
அந்த அதிகாலை..
முன்பே தெரிந்திருந்தால்
முந்தைய இரவில்
நிறைய பேசியிருப்பேனே அப்பா?

யாராவது திருப்பிக்கொடுங்களேன்
அப்பா இறந்தநாளின்
முந்தைய இரவினை!
கொஞ்சூண்டு…
பேசவேண்டும்

உன்
குழந்தையாகிய என்னிடம் நீ
கோவப்பட்டதில்லை!
ஆனால்
உன் குழந்தைச் சேட்டைகளைக் கண்டு
நான் கோவப்பட்டிருக்கின்றேன்

நீ என்னைப்பார்த்து சிரித்த..
கடைசி சிரிப்பு எது?
நீ என்னிடம் பேசிய..
கடைசி வார்த்தை எது?
நீ என்னைப் பார்த்த..
கடைசி பார்வை எது?
நீ என்னைத் தொட்ட..
கடைசி தொடுதல் எது?

கடவுள் இல்லை
சிவாஜி பிடிக்கும்
என்பாய் நீ.
கடவுள் உண்டு
சிவாஜி பிடிக்காது
பொய் சொல்வேன் நான்.

படபடக்க செல்லும் ஸ்கூட்டர்..
சுருட்டை முடி ..
தினமலர் படிக்கையில்
அது சுருட்டும் நீ...

நினைத்துப்பார்க்கின்ற எல்லாமே
துக்கத்தை தருவதால்…
உன் நினைவுகளுக்குப் பிறகு
எனக்கு
தூக்கத்தை தரட்டும் இறைவன்!

எத்தனை பேர் இருந்தாலும்
நீ இல்லாத நம் வீடு
மூலவர் இல்லாத
கர்பக்கிரகமாகவே இருக்கிறது

நம்பிக்கையிருக்கிறது
தண்ணீரில் கலந்த உன் அஸ்தி..
எந்த விளைநிலத்திலோ
அமோக விளைச்சல் கொண்டிருப்பதால் !

மறுபடியும் வா
உனக்கு நான் அப்பாவாகியிருப்பேன்...

No comments: