Tuesday, December 16, 2014

சபரிமலை

பல ஆண்டுகளாய் போய் வர எண்ணியிருந்த ஸ்தலம். தென் இந்தியாவின் ஏக கோயில்களுக்கும் சென்று வந்துள்ளேன், சபரிமலை இன்னும் போகவில்லை என்பது குறையாகவே இருந்து வந்தது.  எப்பொழுதும் போல அன்றும் நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருக்கையில் சபரிமலை பற்றிய பேச்சு வர எல்லோருக்கும் ஒரு வித ஆர்வம் தொற்றிக்கொண்டது. 

அஷோக் மனைவி கேரளா என்பதால், அவர் மேற்படி எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட 41 நாள் விரதம் இருந்து செப்டம்பர் மாதம் 16 தியதி கண்ணி சாமி பூஜைக்கு சபரிமலையில் இருப்பது என முடிவானது.
ஆக் 2 சனிக்கிழமை அன்று முழுவதும் வீட்டை சுத்தம் செய்யும் வேலை, இரவு நானும் அஷோக்கும் பூஜைக்கு தேவையான கருப்பு நீல வேட்டி, சட்டை, துண்டு, மாலை, ஐயப்பன் படம் என எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட, ஆக் 3, ஞாயிறு காலை 6 மணிக்கு பெங்களூர், மடிவாலாவில் இருக்கும் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலில்  நான், அஷோக் அவர் மனைவி மூவரும் சென்று வேண்டிக்கொண்டு முதல் முறையாய் நானும் அஷோக்கும் கண்ணி சாமி அவதாரம்.




முதல் இரண்டொரு நாட்கள் சிரமமாய் இருந்தாலும் பின்னர் பழகிவிட, சைவ உணவு, ஹரிவராசனம் போன்ற ஐயப்பன் பாடல்களுடன் மிக ஷ்ரத்தையுடன் விரதம் தொடர்ந்தது. அலுவலகம் சென்று வரும்பொழுது வெறும் மாலை மட்டும் அணிந்து  கொண்டேன், இரவு வீடு வந்ததும் வேட்டி சட்டை, ஊருக்கு சென்றால் வேட்டி சட்டை என முடிந்த வரை அமைதியாய் நாட்கள் நகர்ந்தன. அம்மா இரண்டு வாரம் என்னுடன் வந்து இருக்க கொஞ்சம் சாப்பாட்டு சிரமம் இன்றி இருந்திருந்தேன்.

செப்டம்பர் 16 கண்ணி பூஜை நடை திறக்கப்படும் என சபரிமலை வெப்சைட்டில் குறிப்பிட்டிருந்தார்கள். மூன்று நாட்கள் விரதம் இருந்து நாங்களும் வருகிறோம என் ராஜேஷும் கணேஷும் எங்களுடன் சேர்ந்துகொள்ள மொத்தமாய் நாங்கள் நால்வர்  செப்டம்பர் 16 சபரிமலையில் இருப்பது என முடிவானது. பெங்களூரிலிருந்து சபரிமலை போக வர சுமார் 1600கிமீ.  மிக நெடிய பயணமாய் இருக்கும் என்பதால், பெங்களூரிலிருந்து கொச்சினுக்கு விமானத்தில் சென்றுவிட்டு அங்கிருந்து ஒரு வண்டி வாடகைக்கு எடுத்துக்கொண்டு சபரிமலைக்கு போய் வருவது எனவும், விமானத்தில் செல்வதால் இருமுடி பம்பை சென்று கட்டிக்கொண்டு அங்கிருந்து மலை ஏறலாம் எனவும் உடன்பாடு.

ராஜேஷும் கணேஷும் மாலை போட்டுக்கொள்ள, நான் அசோக் என நால்வரும் சபரிமலை செல்ல அயத்தமாணோம். அஷோக்கின் காரில் பெங்களுரு விமான நிலையம் சென்று அங்கேயே வண்டிய நிறுத்திவிட்டு, ஏர் ஆசியா விமானத்தில் ஒரு மணிநேர கொச்சின் பயணம். கொச்சினில் எங்களுக்காக ஏற்பாடு பண்ணப்பட்டிருந்த ஓட்டுனர் இன்னோவா காருடன் காத்திருக்க, அங்கிருந்து சுமார் 250கீமீ தொலைவில் இருக்கும் பம்பை நோக்கி ஒரு வித வினோத உணர்வுடன் பயணப்பட்டோம். மலைப் பயணம் என்பதால் செல்லும் வழியெல்லாம் பசுமை. ஓடைகள்,  மரங்கள், வனவிலங்குகள் என மிக சந்தோஷ பயணம் அது. [வழியில், இங்க ஒரு வீடு எடுத்து Work From Home பண்ணலாம் என நாங்கள் பேசிக்கொண்டே போனது நினைவு வருகிறது]




போகும் வழியில் கேரளா உணவு  வகைகள், கொஞ்சம் தூக்கம், அங்காங்கே புகைப்படம், அவரவர் குடும்பத்தாருடன் தொலைபேசி உரையாடல்கள் , வாட்சாப்ப் தகவல் பரிமாறல்கள் என முடித்துக்கொண்டு ஒரு நான்கு மணி அளவில் பம்பை வந்தடைந்தோம். 



ஆச்சர்யம்!!!!  வெறும் 30 பேர் இருந்திருப்பார்கள், பம்பை நதி யாருமில்லாமல் அமைதியாய் பயணித்திக்கொண்டிருந்தது. நதி அருகே ஒரு மண்டபத்தில் சிலரும், பல காட்டுப்பன்றிகளும்  உலவிக்கொண்டிருந்தன, விசாரித்ததில் நடை திறப்பு 16 என்றும், நெய் அபிஷேகம் மறு நாள் காலை தான் என்றும் நாங்கள் ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டதாக கூறவும், ஒரு பெருமழை வரவும் சரியாக இருந்தது. அதிக பட்சம் ஐந்து நிமிடம் என் நினைக்கிறேன் மழை வருவதால் இன்று இரவு பம்பையில் தங்கிக்கொண்டு மறுநாள் காலை சபரிமலை ஏறுவது என்றும், அங்கு தங்கி இருமுடி முடித்துக்கொண்டு அடுத்த நாள் காலை நெய் அபிஷேகம் பார்த்துவிட்டு திரும்புவது என முடிவானது.

அடுத்த சில நிமிடங்களில் நதி ஒட்டி இருக்கும் கேரளா அரசாங்க அதிகாரிகள் தங்கியிருக்கும் அறை ஒன்று எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. பாழடைந்த கட்டிடம், அறை எங்கும் ஈரப்பதம், ஜன்னல் அத்தனையும் கயிறு கொண்டு கட்டியிருந்தார்கள். இருப்பதிலையே நல்ல அறை இது என்றார்கள்.!!!!

சமாளித்து, பொருட்களை அங்கே வைத்துவிட்டு பம்பையில் சென்று குளித்து வர கிளம்பினோம். விநாயகர் கோவில் பக்கத்தில் எங்கள் அறை. அங்கிருந்து கீழ இறங்கினால் பம்பை ஓடை அதை ஒட்டி எதிரில் ஒரு 30-40 கடைகள், நடுவில் நடைபாதை. அறையிலிருந்து விநாயகர் கோவில் வந்து வழிபட்டுவிட்டு கீழே சென்றோம். மழை வந்த ஈரம் வேறு சேர்ந்துகொள்ள கொஞ்சம் அசுத்தமாகவே இருந்தது வழி, தெரு நாய்கள் போல் பன்றிகள் வேறு உலவிக்கொண்டிருந்தது. நடந்து செல்ல செல்ல பார்த்தவை அனைத்தும் முக சுளிக்க வைத்தது. 

பம்பை நதி ஓரம் முழுவதும் மலம். 

கால் வைக்க முடியாத நிலை. வெறும் 20-30 மனிதர்களும் சில பன்றிகளும் இருக்கும் இடம் இவ்வளவு அசுத்தம்  என்றால், லட்சத்தில் பக்தர்கள் வரும் பொழுது அவர்கள் நிலை கண்டு ஒரு நிமிடம் அனைவரும் கலக்கமாணோம். சிறிது நேரம் எங்கே குளிப்பது என அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்க, ராஜேஷ் முகம் அஷ்ட கோணலாக போனது. என் மச்சி என்ன ஆச்சு என கேக்க, "டேய், அப்போசிட்ல இருக்குற கடை, ரூம்ல இருந்து மொத்தமா இங்க கலக்கராங்கடா, மஞ்ச கலர்ல அப்டியே கலக்குதுட" என சொல்லவும் எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. சுதாரித்து, இந்த பக்கமா அத பாக்காம வாடா, அஷோக் கிட்ட இத பத்தி பேசாத அவன் ஏற்கனவே பண்ணிய பார்த்து மூட் அவுட்ல இருக்கான் என் சொல்லி எங்கள் நடை வேகமானது. [நடைபாதை அடியில் பைப் அமைத்து பம்பை எதிர் பக்கத்தில் இருக்கும், அத்தனை கழிவுகளும் இங்க தான் சங்கமம், இதில் அங்கு இருக்கும் நான்கு கால் பன்றிகளுடயுது போனஸ். ]



நெடுந்தூரம் நதி ஓரத்தில் நடந்து சென்றோம். ஆள் அரவமற்ற ஒரு இடத்தில தண்ணீர் சுத்தமாக கீழ் நோக்கி சென்று கொண்டிருந்தது. அங்கே குளித்துவிட எங்கள் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது. சிரமப்பட்டு திரும்ப எங்கள் அறைகளுக்கு வந்து சேர்ந்தோம். [எதையும் பார்க்காமல், எங்கும் நிற்காமல் ஒரே ஓட்டமாக வந்தோம்.] 

ராஜேஷின் BSNL மட்டும் அங்கே வொர்க் ஆக, அதிலிருந்து அனைவரும் அவரவர் அலுவலகம், வீடுகளுக்கு ஒரு நாள் தள்ளி போகும் தகவல் சொல்லிவிட்டு, ஏர் ஆசியா விமானத்தையும் ஒரு நாள் தள்ளி பதிவு பண்ணிவிட்டு, இரவு ஒரு 8 மணி அளவில் சாப்பிட திரும்ப கீழே சென்றோம். இருந்த ஒரு 4-5 கடைகளில் ஒரு கடை மட்டும் திறந்திருந்தது, அங்கேயும் வெறும் பரோட்டா தோசை. கொடுக்கப்பட்ட ப்ளேட் முழுவதும் மண், வாயில் வைக்க முடியாத உணவு. [நான் பத்து வருடங்களாக மூணு வேலையும் கடையில் சாப்பிடுபவன். ருசி அறியாது கிடைத்ததை பசிக்காக சாப்பிட்டு வரும் என்னாலேயே அந்த உணவை சாப்பிட முடியவில்லை.] கடையில் இருக்கும் அனைவரும் குடித்து வேறு இருந்தார்கள், இரண்டொரு வாயில் நிறுத்திக்கொண்டோம். ஆளுக்கு ஒரு டீ, பழம் என முடித்து கொண்டு, chocolate, பிஸ்கட், ஊதுபத்தி, 10 துண்டு என தேவையானவற்றை வாங்கிகொண்டு மீண்டும் ஓட்டமும் நடையுமாய் அறை வந்து சேர்ந்தோம்.

வாங்கி வந்த ஊதுபத்தி அனைத்தும் அங்காங்கே பத்த வைத்து, வாங்கிய அத்தனை துண்டுகளையும் அறை முழுக்க  விரித்துவிட்டு,அங்கு கட்டில் போல இருந்த பலகையிலும் விரித்துவிட்டு, நெடும் போராட்டத்துக்கு பிறகு இரவு 2-3 மணி அளவில் அனைவரும் தூங்கி எழுந்தோம்.

காலை, விநாயகர் கோவில் பக்கத்தில் இருக்கும் சபரிமலை அலுவலகத்தில் 100 ரூபாய் பணம் கட்டிவிட, அங்கே இருக்கும் அர்ச்சகர்கள் இருமுடி [மலையாளத்தில் கெட்டினிர என்கிறார்கள்] கட்டிவிடுகிறார்கள். நால்வரும் இருமுடி கட்டிக்கொண்டு, ஒரு தேங்காய் விநாயகருக்கு உடைத்துவிட்டு சபரிமலை ஏறத்தொடங்கினோம்.


எனது இருமுடியை எடுத்து கொண்டு சென்ற பையில் போட்டுக் கொண்டேன். மற்றவர்கள் இருமுடி கட்டி கொண்டு மலை ஏறினோம். பல முறை வெள்ளிங்கிரி மலை ஏறி பழக்கம் இருப்பதால், பெரிதாய் ஒன்றும் சிரமம் இல்லை. ஒரு சில மணி நேரங்களில், வழியில் இருக்கும் கடைகளில் கிடைத்ததை சாபிட்டுவிட்டு சபரிமலை வந்தடைந்தோம்.



ஒரு 200 பேர் தான் இருந்திருப்பார்கள். பம்பையில் மிகுந்த சங்கடத்திற்கு பிறகு மேல வந்த எங்களுக்கு மேலும் அதிர்ச்சி. அசாதரணமாக ஒரு 20-30 காட்டு பன்றிகள் சுத்திக்கொண்டிருந்தன, அங்கு கிடக்கும் அனைத்தையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தன, தனியாய் யாரேனும் உட்கார்ந்திருக்க அவர்களை விரட்டி விட்டு அங்க இருக்கும் பூஜை தேங்காய்களை தின்றுகொண்டிருந்தன. அனைத்திற்கும் மகுடம், 18 படி பக்கத்தில் சர்வ சாதரணமாக பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன.
நாங்கள் அனைவரும் சற்று வெறுத்தே போயிருந்தோம்.




சகித்துக்கொண்டு அஷோக் யாரிடமோ பேசி ஒரு அறை வாடகைக்கு எடுத்தாகிவிட்டது. மிகுந்த கலைப்பானதால் அனைவரும் சற்று ஓய்வெடுத்துக்கொண்டோம். தங்கி இருந்த அறையில் இருந்து 18 படி பார்க்கும்படி இருந்தது. ஒரு 5 மணி அளவில் கூட்டம் வர தொடங்கியதை அறையிலிருந்தே பார்த்துவிட்டு, நாங்களும் இருமுடி எடுத்து நெய் அரப்பு முடித்துவிடுவோம் என கிளம்பிவிட்டோம். ஹோட்டல் உதவியாளர் வந்தார்... சார் நான் எல்லாம் பண்ணி தரேன் நீங்க கூட வாங்க என கூடிக்கொண்டு சென்றார். எங்களை 18 படி ஏறி சொல்லிவிட்டு அவர் வேறு வழியில் மேல சென்றார், நாங்கள் ஒரு தேங்காயை உடைத்துவிட்டு, சரணகோசத்தோடு 18 படி ஏறினோம். ஏறின இடத்திலயே அவர் நின்றிருந்தார். சுமார் 1000 நபர்கள் இருந்திருக்கக்கூடும், 18 படி ஏறி, இடது புறமாக இருக்கும் படி ஏறி சுற்றி வந்து, நடுவில் இருக்கும் மூலவர் ஐயப்பனை காண வேண்டும். இடது புறமாக ஒரு படி நேராக நடுவில் இருக்கும் ஐயப்பன் முன் முடிகிறது. அங்கு ஒருவர் நின்று கொண்டிருந்தார். எங்களுடன் வந்தவர் எதோ ஒரு ரசீதை அவரிடம் காண்பிக்க கதவு திறக்கப்பட்டது , நாங்கள் நால்வர் மட்டும் அதில் சென்று ஐயப்பன் முன் முதல் முதலாய் தரிசனம். [குறுக்கு வழியில் சென்றதற்கு எத்தனை பேர் எங்களை சபித்தார்கள் என தெரியாது.] யாரும் தொந்தரவு செய்யவில்லை, ஆத்மார்த்தமாய் ஓரிரு நிபிடங்கள் தரிசனம் முடித்துவிட்டு, கீழே வந்து நெய் தேங்காய் உடைத்து, அங்கே ஒரு பாத்திரம் வாங்கி அதில் நிரப்பி  விட்டுவிட்டு, மலையில் இருக்கும் மற்ற சின்ன கோவில்களில் தரிசனம் முடிக்க மணி 8 இருக்கும். நல்ல கூட்டம் சேர்ந்திருந்து  அப்பொழுது,கோவில் பாடல்கள் ஒளிபரப்பபட, மனித கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனது, எங்களுக்கும் கொஞ்சம் கோவில் வந்து சேர்ந்த உணர்வு மேலோங்கியது.





அனைத்தும் முடித்துவிட்டு, இரவு அறைக்கு சென்று 18 படி பார்த்துகொண்டே கதை பேசிகொண்டிருந்தோம், உதவியாளர் வந்தார், நாங்கள் எடுத்து வைத்திருந்த நெய்யை வாங்கி கொண்டு, காலைல 4 மணிக்கு ரெடிஆகிடுங்க நெய் அபிஷேகம் பார்க்க கூட்டிட்டுப்போறேன். ஒடச்ச நெய் தேங்காயே 18 படி முன்னால இருக்க தீயில போட்ருங்க என சொல்லிவிட்டு சென்றார். அஷோக்கும் ராஜேஷும் சோர்ந்துவிட , நானும் கணேஷும் நால்வரின் நெய் தேங்காயை தீயில் போட்டுவிட்டு மீண்டும் ஒரு முறை மேல சென்றோம். ஒரு 30-40 நபர்கள் மட்டுமே இருந்தார்கள், நேராக ஐயப்பன் சந்நிதானம் முன் சென்று நின்று கொண்டு ஆத்மார்த்தமாய் ஒரு 10-20 நிமிட தரிசனம். இன்னும் அந்த சிறிய வெண்ணிற ஹரிஹரசுதன் உருவம் கண்ணில் நிற்கிறது. !! தெய்வ தரிசனம் அது.



போக மனமில்லாமல் அறை சென்று தூங்கி அதிகாலை 4-5 மணிக்கு நாங்கள் தயாராகவும், உதவியாளர் வரவும் சரியாக இருந்தது. வெளிய சென்று பார்க்க நல்ல  கூட்டம், ஆயிரத்தில் மனிதர்கள் இருமுடியோடு வந்து கொண்டிருந்தார்கள். நல்ல ரம்யமான ஒரு காலை பொழுது, பூத்தூவல் போல மழை, நல்ல  குளிர், அதிகாலை,மலை முகடு, முந்தய இரவு அமோக தரிசனம் என அனைத்துமாய் ஒரு ஆனந்தத்தை தந்து கொண்டிருந்தது. நாங்கள் மீண்டும் அதே வழி, மேல ஏறியவுடன் இடது புற கதவு திறக்கப்பட மேல ஏறி நேராக ஐயப்பன் முன் தரிசனம். (விஜய் டிவி சமையல் புகழ் வெங்கடேஷ் பட் எங்கள் அருகில் நின்றுகொண்டிருந்தார், அவருடன் இரண்டு சினிமா பிரபலம் இருந்தனர் ஆனால் சரியாக நினைவில்லை யாரென்று ] 

அந்த அதிகலை ஆனந்தத்தில், நெய் வாசமும் சேர்ந்து  கொண்டது, ஐயப்பன் சிலை முன்பு இடது புறத்தில் ஒரு 5 ஐயர்களும், வலது புறத்தில் ஒரு 5 ஐயர்களும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கொடுக்கப்படும் நெய் பாத்திரங்கள் ஒவ்வொரு ஐயர் கை மாறி, ஐயப்பனுக்கு சென்றடைகிறது. அபிஷேகமான நெய் எதிர் வரிசையில் இருக்கும் ஐயர் கை மாறி கொடுத்தவரிடம் வந்து சேர்கிறது. எங்கள் நெய் பாத்திரங்கள் அதே முறையில் சென்று வந்தது. கூட்டம் அதிகமாக இருந்தாலும், முன்னே நின்று கொண்டிருந்த எங்களை யாரும் எதுவும் சொல்லவில்லை, நாங்கள் சற்றே தரையில் அமர்ந்தாவாறு நெய் அபிஷேகம் ஆகிக்கொண்டிருக்கும் ஐயப்பனை பரமானந்தத்துடன் மெய் சிலிர்க்க தரிசித்தோம். விரத  சிரமங்கள், நெடிய பயணம், முகம் சுளிக்க பட்ட அத்தனை அவஸ்தைகளும் மறந்தே போயின அந்த நொடியில்.
இத்தனை லச்சம் பேர் இங்கே வருவதற்கான ஈர்ப்பு எதனால் என அப்பொழுது உணர்ந்துகொண்டேன்.

இறங்க மனமில்லாமல், அந்த காலை பொழுதினை உள்வாங்கிக்கொண்டு அறை சென்று அனைத்தும் கட்டிக்கொண்டு, ஒரு 30-45 நிமிடத்தில் கீழே பம்பை வந்தடைந்தோம். அங்கே முந்தய நாள் இருமுடி கட்டிக்கொண்ட விநாயகர் கோவிலில் எங்கள் மாலைகளை கழட்டிவிட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைத்து சபரிமலை விரதத்தை முடித்துகொண்டோம்.
அங்கிருந்து கொச்சின் விமான நிலைய பயணம். சற்று நேரம் இருந்ததால் அருகில் இருந்த அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி சென்று ஒரு விசிட்  அடித்துவிட்டு, இரவு ஒரு 12 மணி அளவில் கொச்சின் விமான நிலையத்தில் இருந்து ஒரு 1 மணி நேரத்தில் பெங்களூரு விமான நிலையம். அங்கிருந்து நிறுத்தி வைத்திருந்த காரில் திரும்ப அவரவர் வீடு வந்தடைந்தோம்.



இத்தனை சௌகர்யங்களுடன் சென்ற எங்களுக்கே, இந்த விரதமும்,பயணமும் மிக சவாலாய் இருந்தது. ஏதும் இல்லாமல் வண்டி கட்டிக்கொண்டும், நடை பயணமாகவும் இத்தனை வருடமாய் சென்று வந்தவர்களை நினைக்கையில் பிரமிப்பாய் இருக்கிறது. 

இத்தனையும் மணிகண்டன், ஐயப்பன் தரிசனத்திற்காக மட்டுமே!!

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை காண வந்தோம்...
பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
(சுவாமி சரணம் ஐயப்பா சரணம்)

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
(ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

வார்த்தைகளின் கணம் உணரத்தொடங்குகிறது....

PS:
கோவிலை சுற்றி எங்கும் கழிப்பிட வசதி இல்லை, பம்பை ஏகதேசம் ஒரு அடுத்த கூவம் போல ஆகிவிட்டது, சரியான உணவு மற்றும் தாங்கும் விடுதிகள் இல்லை பக்தர்கள் மிகுந்த சிரமப்படுவதை காண முடிகிறது.  அரசாங்கமோ, தேவஸ்தான ஆட்களோ தங்கள் மெத்தனத்தை குறைத்து கொண்டு சிறிதேனும் சீர்படுத்தினால் நல்லது. [சமீபகாலமாக பெண்களும் பெரிய அளவில் வரத்தொடங்கியுள்ளர்கள்.]

3 comments:

Saravanakumar said...

Nice post machi...

boopathi said...

Well presented. Good job, arun. I wish no women go there until basic needs addressed.

Anonymous said...

Gambling Addiction in Asia - A Gambling Addiction sbobet ทางเข้า sbobet ทางเข้า betway betway betway betway rb88 rb88 12bet 12bet 우리카지노 우리카지노 1XBET 1XBET 920 The Best Asian Bookies Online | Offers & Promo Codes