Wednesday, October 26, 2016

பிரிவு

துவண்டு நின்றபோதெல்லாம் தோள் கொடுத்த தூயவளே....
பிரிவின் கோரைப்பற்களின் வலி பொறுக்க முயல்கிறேன்!!
நேரத்தில் சாப்பிடு நேரத்தில் தூங்கு-
எளிதில் சொல்லிவிடுகிறாய் தொலைபேசியின் வழியே…
நிச்சயம் முடிவதில்லை நீ இல்லாத நாட்களில்!

அருகிலிருந்து ஓயாது பேசிக்கொண்டிருந்த நாட்களில்
அமைதியாய் தூங்கிவிடுகிறேன்!
இல்லா நாட்களில் தனிமை இரைச்சலில் தவிக்கிறேன்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்துவிட்டு ஓடவேண்டும்
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கவேண்டும்..
கண்டித்து ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டவேண்டும்
சிறுபிள்ளைபோல் மடியில் படுத்துக்கொண்டு எழ மறுப்பேன்..
யார் பார்க்கின் பதறி எழுந்து, நிலை உணர்ந்து சிரிக்கவேண்டும்!!
மறைந்திருந்து கொஞ்ச வேண்டும்...

கையிலிருப்பதை தட்டிப்பறிக்க வேண்டும்
மிஞ்ச வேண்டும்.. அழ வேண்டும்… அணைக்க வேண்டும்
கண்டிக்க வேண்டும்… இடை கிள்ள வேண்டும்…
அரைகுறையாய் துவட்டிய துண்டை
என் அவசரக் குளியலுக்கு அபகரித்துப் போகவேண்டும்
கழுத்தில் முடி விலக்கும் என் மூச்சுக்காற்று
நீ கவனமாய் ரசிப்பதை எனக்கு உணர்த்தவேண்டும்

கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா?
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழ வெகு காலம் உள்ளது
விட்டுகொடுத்து...
தொட்டு பிடித்து...
தேவை அறிந்து...
சேவை புரிந்து...
எனக்காய் நீ விழித்து...
உனக்காய் நான் உழைத்து...
வாழ வேண்டும்
சீக்கிரம் வா…
தனியாய் வந்து
துணையாய் வாழும்
தாயே!!