Friday, September 20, 2013

புரிதல்



என்னை மன்னித்துவிடு
எல்லையுள்ள அன்பை
உன்னிடத்தில் காட்டுவதில்
நான் தோல்வியடைந்துவிட்டேன்..!

விலகியும் விலகாமலும்
நெருக்கம் காட்டுகிற
உன் கலை
எனக்கு கை வருவதில்லை
ஆண் பெண் நட்பின்
சமூக பிரச்சனைகளை
நான் அறியாதவனும் இல்லை..!
உன்னைப் பற்றிய
என் நினைப்பை
அதிகரிக்கப்போகிற
நம் பிரிவில்
இனி நாம் நெருங்கியிருப்போம்..!

நீ மட்டும் ஏன்
இப்படியிருக்கிறாய்?
என அடிக்கடி கேட்கிறாய்
நான் என்ன செய்ய?
உன்னோடு பேசுகிற சந்தோசத்திலும்
பேசாத வருத்தத்திலும் தான்
எனக்கு கவிதை கிடைக்கிறது..!

காதல் திருமணம் செய்த
உன் பெயரைக்கொண்ட
வேறு ஒரு தோழியின்
பிரச்சனைகளுக்கு
அனுசரணையாய் நீண்டநேரம்
அலைபேசியில் பேசிய தாக்கத்தில்
உன்னை அவள் பெயரைச்சொல்லி
அழைத்துவிட்டேன்..!

வழக்கத்திற்கு மாறான
மெய்யெழுத்தின் அழுத்தம் கண்டு
கண்கள் சுருக்கி முறைத்து
என்னோடு பேசுகையில்
அவள் எப்படி
உன் நினைவுக்கு வரலாம்
என சண்டையிடுகிறாய்..!

உன்னைப் பற்றிய
என் கவிதைகள் பலவற்றை
மிகைப்படுத்தி எழுதியிருப்பதாக
சொல்கிறாய்..!
மிகைப்படுத்தி எழுதுவதுதான்
கவிதை என்றாலும்
வார்த்தைகளிலேயே
கொண்டுவரமுடியாத
நம் உணர்வுகள் பலவற்றை
வெளிப்படுத்த முடியாத
என் விரக்தியை
வேறு எதன் மீது
நான் இறக்கி வைக்க..?

நான் உன்னை
அன்பு செலுத்துகிற
அளவுக்கு நீ என்னையும்,
நீ என்னை
அன்பு செலுத்துகிற
அளவுக்கு நான் உன்னையும்
அன்பு செலுத்தவில்லையென்று
அவ்வப்போது மாறி மாறி
நினைக்க தூண்டும்
உன் வித்தையில்
எனக்கு புரிந்தது
நாம் நம்மை நம்மைத்தாண்டி
அன்பு செலுத்திக்கொண்டிருக்கிறோம்
என்பதுதான்..!

Monday, September 16, 2013

ஏக்கம்



ரகசியமாய் அழுகிறேன்..........
அவசியமாய் சிரிக்கிறேன்..........
மருந்தாய் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை.......
நகர்கிறது தன் போக்கில் ......

காலத்தின் வேகத்தை சமநிலையில்
ஏற்றுகொள்கிறாய்..
உன்னால் மட்டும் எப்படி??

பேசவேண்டிய சில தருணங்களில்
நான் மௌனித்திருந்த நிமிடங்கள் பல...

வெளிப்படுத்தாத என் வார்த்தைகளின்
வெளிப்படையான அர்த்தங்களை
நீ நன்றாகவே அறிந்திருந்தாய்....

விரைந்தோடும் காலநதியில்
விழிகள் மூடும் போதெல்லாம்
பணித்திரையாய் நினைவுகள்...........

பொழிந்தும் பொழியாமலும்
நினவுச்சாரல்கள் எப்பொழுதும்
மனதை ஈரமாக்கிக் கொண்டு ...........

உறங்க முடியாத கனவுகள் தந்தாய்......
தாயென தாலாட்டி உறக்கமும் தந்தாய்.....
வாழ்வு சுமைஎன்றேன்... பகிர்ந்து கொள் என்றாய்.....
இரவு விழித்ததில்லை... விழிக்க வைத்தாய்....

கவிதை படித்ததில்லை ... எழுத வைத்தாய்....
இத்தனை அன்பை மொத்தமாய் உணர்ந்ததில்லை ....
என்னுள் நுழைந்து ... நீயே உணர்த்தினாய்....
கனவிலும் காணாத உலகம் தந்தாய் ....

நினைத்தும் பார்க்காத... நினைவுகள் தந்தாய்
சிரித்து பேசியே சிரிக்க பழக்கினாய்...
இசையென பரவியே என் நெஞ்சம் நிரப்பினாய்....
உலகம் என்பதே உனக்காய் மாற்றினாய்..

சிரித்த கணங்கள் –சிலிர்த்த கணங்களாய்
மலர்ந்த கணங்கள் - உலகை மறந்த கணங்களாய்
என்மீது உறைந்த கணங்கள் - எனை உணர்ந்த கணங்களாய்
அணைத்த கணங்கள் - என் ஆனந்தக் கணங்களாய்......

உன் கைகோர்த்தபடி
மழையில் நனைய வேண்டும்......
மார்பில் சாய்த்தபடி
குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்.......
மடியில் சாய்ந்தபடி
என் மரணம் வரை உறங்க வேண்டும.......

உன் கண்களில் வெளிச்சம் இருக்கும் தானே ...
உன்னை பார்த்ததும் கவிதைகள் பிறக்கும் தானே....
உனக்குள்ளும் இத்தனை காதல் இருக்கும் தானே
நிச்சயம் இருக்கும்.......
இவை தேவதைகளுக்கான குணங்கள் ...
உனையன்றி யார் பெற்றிருப்பார் ...

அதிகம் காத்திருக்க வைக்காதே ....
வீணாவது உனக்கான காதல்தான்...

தோட்டம் முழுக்க பூத்திருக்கும் பூக்கள் ...
உன் பெயர் சொல்ல காத்திருக்கும் பறவைகள்....
நம்மை நனைக்க காத்திருக்கும் முதல் மழை....
இவற்றோடு சேர்ந்து காத்திருக்கிறோம்....
முழுக்க முழுக்க காதல் நிரப்பி....
நானும் என் இதயமும்....

Thursday, September 12, 2013

வரம்

நான் கடவுளிடம் கேட்டு
கொடுக்காத வரங்கள்
நிறைய.......
ஆனால் நான்
கேட்காமலையே கடவுள்
தந்த வரம் நீ !!!!!!

Tuesday, September 10, 2013

அன்பால்

நாம் தனித்தனியே பிரிந்து
இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர்
பிரியமாய் தான் இருக்கின்றோம்
அன்பால் !!!!