டேய் அம்மா காளஹஸ்திக்கு போகச் சொல்லி சும்மா நச்ச்சரிக்கராங்கடா என எப்பொழுதும்போல அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம் அன்று.,
வரும் வாரம் ரம்ஜான் நோன்புக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை, மூணுநாள் லீவுக்கு ஊருக்கு போய்டுவோம் அதனால இந்த வாரம் காலஹஸ்தி போய்டலாம் நானும் வரேன்னு நண்பர்கள் சொல்ல பயணத்துக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டது.,
கால சர்ப்ப தோஷத்திற்கு சனிக்கிழமை ராகு காலம் உகந்தது என இணையதள தேடல்கள் ஒவ்வொன்றும் முடிவுரை கூற சனிக்கிழமை காலை 9-10:30 ராகு காலத்திற்குள் அங்கு சென்று விட முடிவாகியது. சதீஸ்க்கு போன் பண்ணி "டேய் சனிக்கிழமை காலஹஸ்தி போகறதுக்கு கார் வேணும், உனக்கு என்ன பிளான்"
'நான் ஊருக்கு போறேன் எனக்கு கோகுலாஷ்டமிக்கு வியாழக்கிழமை லீவ், வெள்ளிக்கிழமை நான் லீவ் போட்டுட்டு நாலு நாள் போறேன். புதன்கிழமை சாயந்தரம் வந்து வண்டிய வாங்கிக்கோ"
[ஐந்து நிமிட உரையாடல், நீள் மேல் விசாரிக்காமல் வந்து வண்டி வாங்கிகோன்னு சொல்ற நண்பர்கள் இருக்கும் பொழுது இந்த தோஷம் என்ன பண்ணிடபோகுதுன்னு உள்ளூர ஒரு நெனப்பு வேற., ]
எப்படிப் போவது எந்த வழி நல்லது, பக்கம் என எல்லா விசாரிப்புகளும் முடிந்து சனிக்கிழமை காலை 3:30 மணிக்கு பயணம் ஆரம்பமானது.
தங்கியிருக்கும் அறையிலிருந்து krpuram வழியாக ஹோசக்கோட்டை- கோலார் - பலமனேர் - சித்தூர் - திருப்பதி வழியாக காலஹஸ்தி வந்தடைந்தோம்., ஐந்து மணி நேரப் பயணம். 8:30 மணிக்கு கோயில் முன்பு ஆஜர்., கர்நாடகச் சாலைகளை தவிர்த்து மற்ற அனைத்தும் சூப்பர். ஆந்திரா மாநில சாலைகள் அழகு. தமிழ்நாட்டில் இருக்கும் நான்கு வழிச் சாலைகள் போல் இல்லை எனினும் மேடு பள்ளம் இல்லாத இரு வழிப் பாதை, மலைகளினூடே சில நேரம், சாணி தெளித்து கோலம் போடும் கிராமத்து குடும்பங்கள், தாய் கோழியுடன் இறை தேடிக்கொண்டிருந்த குட்டிகள், சில்லென்ற மழைச சாரல் என வழி நெடுகும் நிறைய கவிதைகள் வியாபித்திருந்தது!
கோவில் முழுவதும் தெலுங்கிலும் தமிழிலும் பெயர் பலகைகள். இருக்கும் அனைவரும் நம்மை எந்த மொழி என்று விசாரித்து பின் நம் மொழி பேசுகிறார்கள்., கால சர்ப்ப தோஷ நிவாரண பூஜைக்கு தொண்ணூறு சதவிதம் மக்கள் வந்திருந்தனர். கொஞ்சம் கூட்டம்.
250 - கோவிலிக்கு வெளிய ஒரு பொது மண்டபத்தில் பூஜை. கூட்டத்தை பொருத்து சுமார் ஐந்திலிருந்து ஆறு மணி நேர வரிசை.
600 - கோவிலுக்கு வெளியே மற்றொரு மண்டபம். ஒரு பத்து சதவித கூட்டம் குறைந்திருக்கக் கூடும்.
1000 - கோவிலுக்குள்ளே முருகர் சிலை முன்பு பூஜை மற்றும் பரிகாரம். ஒரு மணி நேரம்.
1500 - கோவிலுக்குள்ளே மூலவர் முன்பு ஸ்பெஷல் பூஜை., இவர்களுக்கு எல்லா மரியாதையும் உண்டு.,
எல்லா பூஜைகளும் மண்டபத்தில் தான்., ஐயர் மைக்கில் சொல்ல அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் அவ்வளவுதான்., ஆனால் தட்சிணை என்னும் பெயரில் போவோர் வருவோர் பணம் கேட்பார்கள் கொஞ்சம் உஷார்., விளக்கு பற்ற வைக்கும் பெண்மணி, குப்பைகள் பெருக்குவோர், கோவிலை சுற்றி காண்பிப்பவர், ஐயர், கோவில் பூசாரி என கிட்டத்தட்ட எல்லாரும் வாய்க்கு வந்ததை கேட்க கொஞ்சம் கோபமும் இருந்தது.
எல்லாம் முடிந்து மதிய உணவு கௌரி சங்கரில் முடித்து வந்த வழியிலயே திரும்பினோம்., ஏழு மணி நேரப் பயணம். ஆந்திர மாநில வழி நெடுகிலும் பழ விற்பனை படு ஜோர். தர்பூசணி, கொய்யா, இளநீர், நெகாப்பழம், சீதாப்பழம் என அனைத்தும் அன்று பரித்தவைகள். விலையும் கம்மி., காரில் போகும் நண்பர்கள் இவர்களிடம் பழம் வாங்கிச் செல்லுங்கள். என்ன ஏதென்று தெரியாமல் கோவிலில் ஆயிரங்களை இறைத்து கிடைக்காத புண்ணியம் இந்த கிராமாவாசிகள் நியாயமாக விற்கும் நல்ல பழங்களை வாங்குவதில் கிடைக்ககூடும். அன்று அவர்கள் நல்ல உணவருந்தக்கூடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜ கோபுரம் இடிந்து விழுந்த அடையாலாம் கூட தெரியவில்லை. அது எங்கு இருந்தது எப்பொழுது கட்டப் போகிறார்கள் என எதுவும் தெரியவில்லை.,